Thursday, May 20, 2021

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு

குரலோ தேன்சுவைநீ பாடு

குருவி குருவி நீயாடு

குதித்து குதித்து விளையாடு

அணிலே அணிலேநீ ஏறு

அழகாய் தாவிவிளையாடு

ஆட்டுக் குட்டி  தலையாட்டு

அன்பால் கலந்து தலையாட்டு

கன்றே கன்றே நீயோடு 

காரம்பசுவாம் தாயோடு 

கிளியே கிளியே நீ பேசு 

கிள்ளை மொழியை நீ பேசு 



விழிப்புணர்வு

அம்மா அம்மா ஏன் அம்மா
அழகிய முகத்தில் முககவசம்
அத்தை மாமா வந்தாலும்
அருகில் இருக்க முடியவில்லை?

சும்மா இல்லை சுடர்கொடியேே
சூழல் அழிந்து போனதுவே
நம்மை அழிக்கும் நீநுண்மி
நாடுகள் கடந்து பரவியதே

கொரோணா வைரஸ் காரணமே
கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு
மரண ஓலங்கள் உலகமெலாம்
மக்கள் பெறுவோம் விழிப்புணர்வு

இடைவெளி விட்டு நின்றிடுவோம்
இருப்போம் வாய்,விழி,நாசி தொடாமலே
கடைக்கு வெளியே சென்றாலும்
கண்டிப்பாய் அணிவோம் முககவசம்

கைகளை நன்றாய் கழுவிடுவோம்
கவனமாய் சத்துணவு உண்டிடுவோம்
பொய்களை நம்பி ஏமாறாமல்
பொறுப்பாய் விழிப்போடு இருந்திடுவோம்


சிட்டு

 சிட்டே சிட்டே கலங்காதே

சிறிதும் நீயும் அஞ்சாதே
பட்டுப்பூவே பதறாதே
பட்டினம் பார்த்து பதறாதே

கொட்டிக் கிடக்கும் தானியங்கள்
கொத்தி தின்பாய் இயல்பாக
கொரோணா பீதீயில் மக்களிங்கே
கொல்லை நோயால் வாடுகின்றார்

தனிமைச் சிறையில் அடைவதற்கு
தனித்தனியாக வீடிருக்கு
பணிசெய் வீதியில் வாழ்வோருக்கு
படுக்க பாயும் கூழும் இல்லை

உன்னைப் போலவே ஏழைமக்கள்
உலகம் முழுக்க வாடுகின்றார்
சின்னப் பூவே என்செய்வாய்
சிந்தை கலங்கி நிற்கின்றேன்

மனிதர் புரிந்து தனிமையிலே
மறுக்காமல் இருந்தார் ஆனாலே
இனியும் கொரோணா பரவாது
இறப்பும் அதிகம் இருக்காதே

உன்னைப் போல. பறவைகளும்
உழைக்கும் ஏழைப் பாமரரும்
நன்றாய் இருக்க வேண்டுமென
நமது இயற்கை நினைத்திடுமே

கதவுகள் அடைத்து இருந்தாலும்
கவலை வேண்டாம் சிட்டுகளே
சன்னலில் தானியம் நீரிருக்கு
மின்னல் போல் வந்து தின்பீர்

கூடுகள் அடைவீர் குருவிகளே
குஞ்சுகள் காப்பீர் குருவிகளே
நாடுகள் கடந்த கொரோணாவை
நாமும் எதிர்த்து மீண்டிடுவோம் !

Tuesday, June 12, 2018

நகரத்து மாடு


ஆடி அசைந்து இலட்சுமி மாடு  நடந்துவந்தது
அப்படி இப்படி பார்த்து பார்த்து நடந்துவந்தது
வீட்டு  அருகில் வந்ததுமே நின்று பார்த்தது
விவரம் புரிந்த அம்மா உள்ளே சென்றனள்

கழுத்தை ஆட்டி மாடு எனக்கு வணக்கம் சொன்னது
கண்ட உடனே எனக்கும பெரு மகிழ்ச்சி நிறைந்தது
எழுத்து கூட்டி சுவரொட்டியை படிக்கத் தொடங்கினேன்
எளிதாய்  மாடும் சுவரொட்டி கிழித்து தின்றது

உள்ளேயிருந்து  அம்மா கஞ்சித் தண்ணீர் கொண்டு வைத்தாள்
உறிஞ்சிக் குடித்து மாடும் சோற்றை மென்று சுவைத்தது
எல்லா நாளும் வரும் மாட்டை சிலநாள் காணல
எழிலன் சந்தையில் பார்த்ததாக என்னிடம் சொன்னான்

காடுவயல் கழனியெல்லாம் மேய்ந்திடும் மாடு
கான்கிரீட்டு காடுகளால் அடைந்ததே தொல்லை
நாடுவிட்டு  நாடுசென்ற  ஏதிலி போலே
நகரத்து மாடுகளும் ஆனது தானே

Sunday, May 20, 2018

தன்பலம்(கதைப்பாடல்)


May 12 (8 days ago)

தன்பலம்(கதைப்பாடல்)
சங்கராபரணி ஆற்றோரம்
சரித்திரம் போற்றும் ஓர்நகரம்
எங்கனும் பச்சை வயல்வெளிகள்
எழில்சூழ் நகரம் வில்லியனூர்

ஆற்றங்கரையில் அன்றாடம்
அழுக்குத் துணிகளை வெளுத்திடுவான் 
கீற்றுக் கொட்டகையில் வசித்தாலும் 
கீழ்மை இல்லா துளசிங்கம்

பொதிகளைச் சுமந்து செல்வதற்கு
பொத்தி வளர்த்தான் ஒருகழுதை
விதியினை எண்ணி அக்கழுதை
வினையினை முடித்து வாழ்ந்ததுவே|

வெள்ளைத் துணிகளை சுமந்துகொண்டு
வேக மாகவே  நடைபோட்டு
கள்ளமில்லா மனத்துடனே
கழுதை தினமும் சென்றுவரும்

சுல்தான் பேட்டை அடைந்ததுமே
சுரக்கும் வாயில் உமிழ்நீரும்
அல்வா போலே சாராயம் 
அருந்திட துளசிங்கம் விரும்பிடுவான்

சாலையோர மரத்தினிலே 
சமத்தாய் கழுதை கட்டிவிட்டு
சந்தில் புகுந்து சென்றிடுவான்
சாராயம் குடித்து மகிழ்ந்திடுவான்

கட்டியிருக்கும் கழுதைக்கும்
கனிவாய்த் தீனியும் வைத்திடுவான் 
முட்டி அதுவும் தின்கையிலே
முகத்தை நுழைக்கும் தெருநாய்தான்

தீனியைத் தின்ன முடியாமல்
திணறும் கழுதை எப்போதும்
ஏனிந்த நிலையென வருந்திவிடும்
இன்னல் அடைந்த கழுதையுமே

ஒருநாள் இப்படி நடக்கையிலே
ஓங்கி உதைத்தது கழுதையுமே
மறுமுறை கழுதையைப் பார்த்தாலே
மாயமாய் மறைந்தது நாய்ஓடி

தன்பலம் உணரத் தலைப்பட்டால்
தாழ்வே இல்லை வாழ்க்கையிலே|
தம்பி தங்கைகள் உணர்வீரே|
தன்னம்பிக் கையோடு வளர்வீரே|

Monday, July 25, 2016

பலூன்

மூச்சைப் பிடித்து ஊதினேன்
மெல்ல வயிறு பெருத்தது
பேச்சை பேச நினைத்தேன்
பெருத்த வயிறு சுருங்கியது

மீண்டும் காற்றை ஊதினேன்
மேனி பெருத்துப் போனது
நீண்ட நேரம் ஊதினேன்
நிறைந்த காற்றால் வெடித்தது

முயற்சி சிறிதும் குறையாமல்
வேறு பலூனை ஊதினேன்
கட்டி பறக்க விட்டதும்
காற்றில் பறந்து போனது

சூரியக்குடும்பம்

கதிரவனைச் சுற்றிடும் எட்டு கோள்கள்
கண்டதில்லை எவரும் அவற்றின் கால்கள்
பந்து போல வானத்திலே சுற்றி வருகுது
பறவை போல சூரியனை வலமும் வருகுது

நிலவும் கூட சூரியனின் ஒளியைப் பெற்றது
நிறைந்து தேய்ந்நு நிலையாமை அறியவைக்குது
நீள்வட்டப் பாதையிலே  எல்லாம் சுற்றுது
நிச்சயமாய் அறிவியலால் நாமும் கற்றது

பூமி வியாழன் வெள்ளி சனியாம் பேரு
புதன் செவ்வாய் நெப்டியூன் யுரேனசு பாரு
நாம் வாழும் பூமிக்குத் தாய்தான் சூரியன்
நலமாய் வாழ உயிர்களுக்கு சக்தி சூரியன்

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...