May 12 (8 days ago)
![]() | ![]() ![]() | ||
தன்பலம்(கதைப்பாடல்)
சங்கராபரணி ஆற்றோரம்
சரித்திரம் போற்றும் ஓர்நகரம்
எங்கனும் பச்சை வயல்வெளிகள்
எழில்சூழ் நகரம் வில்லியனூர்
ஆற்றங்கரையில் அன்றாடம்
அழுக்குத் துணிகளை வெளுத்திடுவான்
கீற்றுக் கொட்டகையில் வசித்தாலும்
கீழ்மை இல்லா துளசிங்கம்
பொதிகளைச் சுமந்து செல்வதற்கு
பொத்தி வளர்த்தான் ஒருகழுதை
விதியினை எண்ணி அக்கழுதை
வினையினை முடித்து வாழ்ந்ததுவே|
வெள்ளைத் துணிகளை சுமந்துகொண்டு
வேக மாகவே நடைபோட்டு
கள்ளமில்லா மனத்துடனே
கழுதை தினமும் சென்றுவரும்
சுல்தான் பேட்டை அடைந்ததுமே
சுரக்கும் வாயில் உமிழ்நீரும்
அல்வா போலே சாராயம்
அருந்திட துளசிங்கம் விரும்பிடுவான்
சாலையோர மரத்தினிலே
சமத்தாய் கழுதை கட்டிவிட்டு
சந்தில் புகுந்து சென்றிடுவான்
சாராயம் குடித்து மகிழ்ந்திடுவான்
கட்டியிருக்கும் கழுதைக்கும்
கனிவாய்த் தீனியும் வைத்திடுவான்
முட்டி அதுவும் தின்கையிலே
முகத்தை நுழைக்கும் தெருநாய்தான்
தீனியைத் தின்ன முடியாமல்
திணறும் கழுதை எப்போதும்
ஏனிந்த நிலையென வருந்திவிடும்
இன்னல் அடைந்த கழுதையுமே
ஒருநாள் இப்படி நடக்கையிலே
ஓங்கி உதைத்தது கழுதையுமே
மறுமுறை கழுதையைப் பார்த்தாலே
மாயமாய் மறைந்தது நாய்ஓடி
தன்பலம் உணரத் தலைப்பட்டால்
தாழ்வே இல்லை வாழ்க்கையிலே|
தம்பி தங்கைகள் உணர்வீரே|
தன்னம்பிக் கையோடு வளர்வீரே|

