Monday, July 25, 2016

பலூன்

மூச்சைப் பிடித்து ஊதினேன்
மெல்ல வயிறு பெருத்தது
பேச்சை பேச நினைத்தேன்
பெருத்த வயிறு சுருங்கியது

மீண்டும் காற்றை ஊதினேன்
மேனி பெருத்துப் போனது
நீண்ட நேரம் ஊதினேன்
நிறைந்த காற்றால் வெடித்தது

முயற்சி சிறிதும் குறையாமல்
வேறு பலூனை ஊதினேன்
கட்டி பறக்க விட்டதும்
காற்றில் பறந்து போனது

சூரியக்குடும்பம்

கதிரவனைச் சுற்றிடும் எட்டு கோள்கள்
கண்டதில்லை எவரும் அவற்றின் கால்கள்
பந்து போல வானத்திலே சுற்றி வருகுது
பறவை போல சூரியனை வலமும் வருகுது

நிலவும் கூட சூரியனின் ஒளியைப் பெற்றது
நிறைந்து தேய்ந்நு நிலையாமை அறியவைக்குது
நீள்வட்டப் பாதையிலே  எல்லாம் சுற்றுது
நிச்சயமாய் அறிவியலால் நாமும் கற்றது

பூமி வியாழன் வெள்ளி சனியாம் பேரு
புதன் செவ்வாய் நெப்டியூன் யுரேனசு பாரு
நாம் வாழும் பூமிக்குத் தாய்தான் சூரியன்
நலமாய் வாழ உயிர்களுக்கு சக்தி சூரியன்

Wednesday, July 20, 2016

மரமே நலந்தானா?

மரமே மரமே நலந்தானா?
மண்ணுக்குள் வேரும் சுகந்தானா?
வரமாய் வந்த மரமேநீ
வாடிட நானும் விடுவேனா?

நச்சுப் புகையால் நலிந்துவிட்டாய்
நாளும் வெட்டிடக் குறைந்துவிட்டாய்
மச்சு மாளிகை வீடுகளில்
கதவாய் சன்னலாய் மாறிவிட்டாய்

மழைபெற உன்னை வளர்த்திடுவேன்
மண்ணும் வளம்பெற வளர்த்திடுவேன்
விழைந்து உன்னைக் காத்திடுவேன்
உயிர்வளி பெற்று வாழ்ந்திடுவேன்

சிவப்புக் கடற்கரை

சீன நாட்டின் கடற்கரை
சிவப்புக் கம்பளக் கடற்கரை
பன்சின் நகரக் கழிமுகம்
படர்ந்த அழகுக் கடற்கரை

வசந்த காலம் வந்ததும்
வளரும் பச்சை பாசிகள்
கோடைக்காலம் தொடங்கினால்
மாறும் சிவப்பு வண்ணத்தில்

மண்ணின் உப்புக் காரத்தால்
மாற்றம் நிகழும் கடற்கரை
எண்ணிலா சுற்றுலாப் பயணியர்
இதயம் ஈர்க்கும் கடற்கரை

உறவுகள்

வீட்டுத்  தோட்டந் தன்னிலே
விதவித மாய் மரங்களாம்
நோட்டம் விட்டுப் பார்த்திட்டேன்
நொடியில் ஒருமை கண்டிட்டேன்

மரத்தைச் சுற்றிக் கொடிகளும்
மரநிழலில் செடிகளும்
இயல்பாய் தானே இருந்தன
இயற்கை அழகே அழகுதான்

பறவைகள் மரத்தில் அமர்ந்தன
பழங்கள் கொத்தித் தின்றன
இரவை மரத்தில் கழித்தன
இன்பமாகப் பறந்தன

குடும்பம்

தாத்தா பாட்டி வழியிலே
தாயும் தந்தையும் வந்தனர்
காத்துக் குடும்பம் போற்றினர்
கண்ணி யமாய் வாழ்ந்தனர்

அக்கா அண்ணன் என்றுமே
தம்பித் தங்கையர் கூடியே
மாமா அத்தை சேர்ந்துதான்
மகிழ்ச் சியாக வாழ்ந்தனர்

உலக அரங்கில் குடும்பமே
உயர்ந்த அமைப்பாய் இருக்குது
கவலை மகிழ்ச்சி அனைத்தையும்
கலந்து பேசி ஏற்கிறார் 

மாம்பழம்

சித்திரை மாத வெய்யிலில்
சிரிக்கும் கிளையில் மாம்பழம்
கத்திரி வெய்யில் ஆனாலும்
கனிந்து இனிக்கும் மாம்பழம்

விருந்தில் வைக்கும் மாங்கனி
விரும்பி உண்ணும் கிளைக்கனி
நறுந்தேன் போல சுவைத்திடும்
நல்ல பழமே மாங்கனி

இதயம் போன்ற வடிவிலே
இருக்கும் இனிய தேன்கனி
இனிப்பால் உள்ளம் ஈர்த்திடும்
இயற்கை கொடையே மாங்கனி

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...