Tuesday, April 13, 2010

கோலம்


விடியற் காலைப் பொழுதில்
வாசலில் தண்ணீர் தெளித்து
நொடியில் பெருக்கிக் கூட்டி
நோண்பாய் கோலம் போடுவாள்

வரிசை யாகப் புள்ளி
வாஞ்சை யோடு வைப்பாள்
அரிசி மாவில் கோலம்
அழகாய் அக்கா இடுவாள்

தரையில் பூத்த பூவாய்
தோன்றும் அழகு கோலம்
நிறைந்த இன்பம் கொடுக்கும்
நின்று பார்க்கத் தூண்டும்

எறும்பு ஊர்ந்து வந்து
எடுத்து மாவை உண்ணும்
விரும்பி மகளிர் எப்போதும்
வியந்து போடும் கோலம்

Monday, April 12, 2010

நிலாவே வா


குளிர்ந்த நிலவே வாராய்
குழந்தை மகிழ வாராய்
நெளிந்த நீரில் நீந்தும்
திங்கள் படகே வாராய்

நெளியும் பாம்பாய் மேகம்
நின்னைத் தீண்ட ஏகும்
வளியும் விலக்கப் பொலிவாய்
வனப்பு நிலவே வாராய்

தேய்ந்து வளர்ந்து வருவாய்
தினமும் புதுமைப் புரிவாய்
ஆய்ந்து அறிந்து உன்னில்
அடுக்ககம் கட்ட முயல்வார்

ஓய்தல் இன்றி நீயும்
உலகைச் சுற்று கின்றாய்
காய்தல் உவத்தல் இன்றி
கடமை செய்வாய் வாராய்

Tuesday, April 6, 2010

மரம்


மண்ணில் வளரும் நிழற்குடை
விண்ணின் நண்பன் மழைக்குடை
தண்ணீர் உறிஞ்சி வளர்ந்திடும்
கண்ணில் குளுமை வழங்கிடும்

நச்சுக் காற்றை சுவாசிக்கும்
நல்லக் காற்றை வெளியிடும்
உச்சி நோக்கிச் சென்றிடும்
உயர்வை நமக்கு போதிக்கும்

கிளைகள் அசைத்துப் பேசிடும்
கிளிகள் அமர்ந்தால் பழந்தரும்
இலைகள் பச்சயம் தயாரிக்கும்
இனிதாய் மரமும் வாழ்ந்திடும்

வேர்கள் பரப்பி நின்றிடும்
வேற்றுமை இன்றி நிழல்தரும்
ஊர்கள் முழுதும் வளருங்கள்
உலகம் செழிக்க உதவுங்கள்

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...